சென்னை: சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து இந்தக் கடத்தல் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.
ஏர்போர்ட் கடை சிக்கியது: இதையடுத்து சுங்கத்துறை தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்து அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கடையில் பணியாற்றும் 7 பேருக்கும் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான பிசிஏஎஸ் பாஸ் முறையான காவல்துறையின் தடையில்லா சான்று போன்றவை பெற்றுள்ளனர்.
உள்ளாடைகளுக்குள் பதுக்கல்:அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து டிரான்சிட் பயணிகள் சிலர் கடத்திக் கொண்டு வரும் தங்கத்தை விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சபீர் அலிக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி அந்த தங்கத்தை ஊழியர்கள் உள்ளாடைகளுக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறுத்து வைத்து வெளியில் கொண்டு வந்து சுங்கச் சோதனை இல்லாமல் வெளியே கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இதேபோல் கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து விமானத்தில் டிரான்சிட் பயணியாக சென்னைக்கு வந்துவிட்டு சென்னையில் இருந்து மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ட்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதியின் கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் வந்ததால் அந்த கழிவறையில் சோதனை இட்டபோது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களில் ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை கைப்பற்றினர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, இலங்கை கடத்தல் பயணி சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஓனர் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, யூடியூபர் சபீர் அலி சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை தொடங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் எப்படி அனுமதி பெற்றார்? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அது குறித்து தீவிரமாக விசாரித்த போது, சென்னை விமான நிலையத்தில் கமர்சியல் பிரிவில் இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் சபீர் அலிக்கு உதவி செய்துள்ளது தெரியவந்தது.