சென்னை: மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் செயலிழப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டு, நேற்று (ஜூலை 19) பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாது, ஏராளமான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிக்குள்ளாகினர்.
இத்தகைய சூழலில், சென்னை விமான நிலைய பொறியாளர்கள் மற்றும் இணையதள தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக பணியாற்றி ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு, இன்று (ஜூலை 20) காலை 11 மணியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரமாக பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் மேனுவல் முறையில் கைகளால் எழுதிக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கம்ப்யூட்டர்கள் மூலமாக பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.