சென்னை:இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
லிம்கா புத்தகம்:இந்த அற்புதமான சாகசங்களை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்தனர். இதன் காரணமாக உலகிலேயே அதிக மக்கள் நேரில் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கோவளத்திலிருந்து எண்ணூர் வரையிலான கடற்கரையோரமும், உயரமான கட்டிடங்களின் மேற்கூரைகளிலும் நின்று பொது மக்கள் கண்டு களித்தனர்.
இதுவரை இல்லாத மிகப்பெரிய விமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். விமானப்படையின் ஆண்டு விழா தலைநகர் டெல்லியில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விமானப்படையின் சாகசங்களை மற்ற நகரங்களில் உள்ள மக்களும் பார்க்கும் வகையில் டெல்லியிலிருந்து பிற நகரங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
முதலில் டெல்லிக்கு வெளியே சண்டிகரில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இது அதிக மக்கள் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என சாதனை புரிந்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ஏர் ஷோ; பெங்களூரு, கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!
போக்கு வரத்து மாற்றம்:இதற்காக கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பொது மக்களின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் போலிசார் ஈடுபட்டனர். சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மெரினா கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ வசதியும், பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது.
வான் சாகசம்:வான் சாகச நிகழ்வின் முதலில் தலைசிறந்த பாராஜம்பர் குழுவான ஆகாஷ் கங்கா குழுவினர் வானில் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசத்தை நிகழ்த்தி காட்டினர். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு வழியாக எதிரிகளின் முகாம்களில் தரையிறங்கிப் பிணையக் கைதிகளாக சிக்கி இருக்கும் மக்களை மீட்பது தொடர்பான போர் யுத்திகளை செய்து காண்பித்தனர்
தொடர்ந்து4 சேடக் ஹெலிகாப்டர்கள் இந்தியக் கொடியினை ஏந்திய படி பறந்தது. பின்னர் இந்தியாவின் போர் விமானங்களில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ரபேல் விமானம் அணிவகுப்பில் வானில் மேகத்தைக் கிழித்துக்கொண்டு அதிவேகத்தில் சென்று பொது மக்களை வியப்படையச் செய்தது.
மெரினாவில் சீறிப்பாய்ந்த விமானங்கள் (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:வானில் வர்ணஜாலம் காட்டிய தேஜஸ்.. கெத்து காட்டிய பாண்டியர் குழு.. மெரினாவில் மெய்சிலிர்க்க வைத்த இந்திய விமானப் படை!
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான மூன்று பிரசன்ட் விமானம் சங்கம் அணி வகுப்பில் வானில் பறந்து மக்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த ஹார்ட்வேர் விமானம் பல்லவன் அணிவகுப்பில் வாழி வட்டமிட்ட படியும் பொதுமக்களுக்கு அருகில் மிகத் தாழ்வாக இயக்கியும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது.
ஹிந்துஸ்தான் டர்போ டிரைனர் (HTT -40) விமானம் கலாம் அணிவகுப்பில் வானில் செங்குத்தாக இயக்கியும் குட்டிக்கரணம் அடித்தும் சாகசங்களை நிகழ்த்தியது. சென்னை கோவளம் கடற்கரையிலிருந்து சென்னை மெரினா கடற்கரை ஐஎன்எஸ் அடையார் நோக்கி தமிழ் பெயர்களின் பங்கேற்ற இந்திய விமானப் படைகளின் அணிவகுப்பு இறுதியாக வட்டமடித்து கடலிலிருந்து பார்வையாளர்களை நோக்கிப் பறந்தவாறு அணிவகுப்பை நிறைவு செய்தன.
விமான சாகச நிகழ்ச்சி கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu) முதலமைச்சர் கண்டுகளிப்பு:நீலகிரி அணிவகுப்பில் மூன்று ஜாக்குவார் விமானங்களும் மூன்று திசைகளிலும் பிரிந்து சென்று தீ பிழம்புகளைக் கக்கிய படி சாகசங்களை நிகழ்த்தின. விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஆர்வமாகக் கண்டு களித்தார்.