கிருஷ்ணகிரி:கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குவியல் குவியலாகப் பொங்கும், ரசாயன நுரைகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யப்பட்டு வருவதால், அணைக்கு வரக்கூடிய நீர் தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 474கன அடி நீர் வரத்தாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து விநாடிக்கு 205 கன அடியாக இருந்துள்ளது. ஆனால், அணையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்குப் பிறகு ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து ஓடுவது விவசாயிகளுக்கு ஆறுதல் என்றாலும், ஆற்று நீரில் கலக்கப்பட்ட அதிகப்படியான ரசாயன கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆற்றங்கரையோரமாக உள்ள எல்லைப் பகுதிகளில் வெள்ளை பனி போர்த்தியது போல, மலைபோன்று குவியல் குவியலாக நுரைப்பொங்கி காட்சியளிக்கின்றனர். இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.