தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 12:48 PM IST

ETV Bharat / state

மீண்டும் மீண்டும் அறுந்த வடம்.. 3 மணி நேரத்தில் 500 மீட்டர் மட்டுமே நகர்ந்த தேர் - நெல்லையப்பர் தேரோட்டத்தில் நடப்பது என்ன? - Nellaiappar Temple Chariot

Nellaiappar Temple Chariot: நெல்லை நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவில் தேர் வடம் மீண்டும் மீண்டும் அறுந்து விழுந்ததால் அதிர்ச்சி; கடந்த 500 ஆண்டுகளில் நடக்காத ஒன்று நடந்ததற்கு காரணம், அறநிலையத்துறையின் அலட்சியமே என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் அறுந்த வடம்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் அறுந்த வடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை டவுனில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், ஆனி மாதம் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

இந்த நிலையில் இன்று 518-வது ஆனித் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை 6:30 மணி முதல் 7.30 மணிக்குள் தேர் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்பட சிறப்பு விருந்தினர்கள் 7:18 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, தேர்த் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.

நெல்லையப்பர் தேரோட்டத்தில் வடம் அறுந்த வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால், அப்போது தேரில் கட்டப்பட்டிருந்த மூன்று ராட்சத வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தேர் இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேரில் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக தேர் திருவிழா தொடங்கிய நிலையில், மீண்டும் ஒரு சில வினாடிகளில் வடம் அறுந்தது. பின்னர் மீண்டும் மாற்று வடம் கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்ட நிலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் வரும்போது 3வது முறையாக தேரின் வடம் அறுந்தது.

இதையடுத்து இரும்பு சங்கிலி கொண்டு தேரை இழுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதன்படி இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு இரண்டு வடத்துக்கு நடுவில் கட்டப்பட்டது. அதேசமயம் இதுவரை நடைபெற்ற 517 தேர்த்திருவிழாவில் ஒருமுறை கூட தேரின் வடம் அறுந்தது இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இதுவரை ஒரு முறை கூட தேரை இழுக்க இரும்புச் சங்கிலி பயன்படுத்தவில்லை, சாஸ்திர ரீதியாக கயிற்றுக்குப் பதிலாக இரும்பு சங்கிலி பயன்படுத்தியது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் வேறு வழி இல்லாமல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தேரை இழுக்கத் தொடங்கினர். அதே சமயம் சிறிது தூரம் தேர் போன நிலையில், 4வது முறையாக வடம் அறுந்தது. பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தேர் இழுக்கப்பட்டு டவுன் வாகையடி மூக்கில் செல்லும்போது மீண்டும் 5வது முறையாக வடம் அறுந்தது. இதுபோன்று அடுத்தடுத்து 5 முறை திருத்தேர் வடம் அறுந்ததால் பக்தர்களை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே தேர் இழுக்கத் தொடங்கிய சில வினாடிகளிலேயே வடம் அறுந்ததால், பக்தர்கள் அதை அபசகுனமாகக் கருதினர். குறிப்பாக 517 ஆண்டுகளில் இல்லாத வகையில் இதுபோன்ற வடம் அறுந்ததால், இந்து அறநிலையத்துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக்கூறி இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் மத்தியிலும், கோயில் நிர்வாகம் மீது கடும் பக்தர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேருக்குப் பின்னால் தடி வைப்பதிலும் கடும் சிரமங்கள் ஏற்பட்டது. இருப்பினும் இளைஞர்கள் பட்டாளம் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல், முழு உற்சாகத்தோடு தொடர்ந்து தேரை நகர்த்துவதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக 5 முறை வடம் அறுந்த பின்பும் தொடர்ந்து தேர் முதல் ரத வீதியைக் கடந்து இரண்டாவது ரத வீதிக்கு நகர்ந்துள்ளது.

ஆனால், வழக்கமாக இந்த நேரத்தில் 2 ரத வீதிகளைக் கடந்து தேர் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வடம் அறுந்து விழுந்த காரணத்தால், இம்முறை நெல்லை தேர் திருவிழாவில் மிகவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தேர் திருவிழா தொடங்கி 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சுமார் 500 மீட்டர் மட்டுமே தேர் நகர்ந்து இருந்தது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து தேர்வடம் நெல்லையப்பர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details