திருவாரூர்: திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தார். முன்னதாக அவர் இன்று (அக்.7) காலை திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் பாஜகவினர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் தியாகராஜர் சுவாமியை வழிபட்டார். தொடர்ந்து கமலாம்பாள் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகளில் வழிபட்ட அவர், தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த, வெளியூர் பக்தர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
இதையும் படிங்க:"முதல்வர் அழைத்ததால் தான் மக்கள் சென்றார்கள்; மரணங்களுக்கு அவரே முழு பொறுப்பு" - எடப்பாடி பழனிசாமி
பின்பு சாலை மார்க்கமாக திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்கு காலை உணவை முடித்துவிட்டு பின்பு திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள நகராட்சியிலிருந்து உறுப்பினர் சேர்க்கைக்காக கல்லூரி மாணவர்களிடம் எண்களை சொல்லி, மிஸ்டு கால் கொடுக்க வைத்து ஒவ்வொரு கடையாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில பொறுப்பாளர் பேட்டை சிவா, முன்னாள் மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்றார்.
மத்திய அமைச்சர் வருகையினால் இன்று காலை முதல் திருவாரூர் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்