தஞ்சாவூர்: திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்கப்படுத்தல் மற்றும் பயிற்சி மையம் (Technology Development Accelerator & Training centre) திறப்பு விழா நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கலந்து கொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், டிரோன் மற்றும் நவீன தேங்காய் உரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை கேட்டறிந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து நடந்த விழாவில் பங்கேற்று மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே உரையாற்றினார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, "இந்தியாவின் மக்கள்தொகையான 140 கோடியில், இளைஞர்களின் எண்ணிக்கை 63 சதவீதமாக உள்ளது. இளைஞர்கள்தான் இந்த நாட்டில் நீண்ட நாள்களாக வாழக்கூடியவர்கள். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களை நம்பியே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மேலும் "வளர்ந்த பாரதம் 2047" விரிவானத் திட்டம் இளைஞர்களை நம்பிதான் இருக்கிறது.