சென்னை :சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டமே மெட்ரோ ரயில் திட்டம். இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மத்திய அரசு நிதி உதவியுடன் குறிப்பிட்ட காலத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், மெட்ரோ திட்டத்தை விரிவாக்கும் வகையிலும், பொது போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அடங்குமாறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடனும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் 116 கிமீ தூரத்துக்கு 2ம் கட்ட பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த 2ம் கட்ட திட்டத்துக்கு சுமார் ரூ.63,246 கோடிக்கும் அதிகமாக நிதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். இதற்காக சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நேரில் பிரதமரிடம் வலியுறுத்தினார்.