Central Chennai NTK Candidate சென்னை: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தால் தேர்தல் களம் சற்றே சூடு பிடித்துள்ளது. குறிப்பாக வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர் கார்த்திகேயன் இன்று (ஏப்.02) சூளைமேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஆட்சியில் உள்ள ஆளும் கட்சி வேட்பாளரை மக்கள் தொகுதி பக்கமே விடுவதில்லை. ஏனென்றால், தேர்தலின் போது வாக்கு சேகரிக்கத் தொகுதி பக்கம் வந்தவர்கள் அதற்குப் பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொகுதி பக்கமும் வரவில்லை என மக்கள் கேள்விகளால் துளைத்து வருகிறார்கள்.
மேலும், எங்களுடைய அடிப்படை வசதிகள் எல்லாம் அழித்து விட்டீர்கள் எனவும் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்தில் மாற்றி அமைத்து விட்டீர்கள் இப்படி எங்களுக்கான எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓட்டுக்கு மட்டும் இங்கு வருகிறீர்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், எங்களை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் படித்த இளைஞர்கள் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று எங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்" என்று கூறினார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "நாங்கள் களத்தில் பணியாற்றக்கூடிய போராளிகள். அதனால், எவ்வளவு விரைவாக மக்களிடம் சின்னத்தைக் கொண்டு சேர்க்க முடியுமோ அவ்வளவுக்குக் கொண்டு சேர்த்துள்ளோம். எங்களுக்கு எந்த சின்னமாக இருந்தாலும் நாங்கள் யார் என்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால், சின்னம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை.
நாங்கள் ஜனநாயகத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறோம் ஆனால் திமுக, பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பணநாயகத்தை நம்பி மட்டுமே தற்பொழுது இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் அப்படி அல்ல நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வருகிறோமே தவிர மக்களுடைய வரிப் பணத்தை எடுத்து அவர்களுக்குச் செலவு செய்வதற்காக அல்ல.
அதேபோல, ஓட்டுக்குக் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறது. பணப்பட்டுவாடா செய்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு இல்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் தமிழர் கட்சியினரைப் பொருத்தவரை கருத்தியல் ரீதியாக மிக வலுவானவர்கள் எங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தான் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் அதிகம் நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்கின்றனர் அவதூறுகளை எங்கள் மீது பரப்புகிறார்கள்.
சென்னையை பொருத்தவரை நீர் மேலாண்மை என்பது சென்னையில் முழுவதுமே கிடையாது. ஒரு சிறிய மழைக்குப் பெருவெள்ளம் ஏற்படக்கூடிய நிலை தான் சென்னையில் இருக்கிறது. எங்களுடைய முதல் திட்டமே நீர் மேலாண்மையைச் சரி செய்வது.
இதுமட்டும் அல்லாது, வாகன நெரிசலை சரிசெய்வதற்கு வெர்டிக்கல் பார்க்கிங் கொண்டு வருவது, அதன் மூலமாகப் போக்குவரத்து நெரிசலை சீர்திருத்துவதற்கான முன்னெடுப்புகள் நாங்கள் எடுப்போம். அதேபோல, கழிவு நீர் சொல்லக்கூடிய கால்வாய்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் அடைப்பு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளைத் தருகிறது. இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டுமென மக்கள் தங்களிடம் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "தேர்தல் பத்திரங்கள் மூலமாக மாநில மற்றும் தேசிய கட்சிகள் எவ்வளவு கோடி பணம் வாங்கியுள்ளது என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது. இதன் மூலமாக வேட்பாளருடைய நேர்மை என்ன, எந்த அளவிற்கு அவர்களுடைய கட்சி இருக்கிறது என்பது மக்களுக்குப் புரிந்திருக்கிறது. அதற்கு உச்ச நீதிமன்றமும் ஒரு நல்ல வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி!