தமிழ்நாடு

tamil nadu

நெல்லை பிரபல ஸ்வீட் கடை முறுக்கில் பூரான்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி! - Centipedes in Nellai Snacks

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 3:31 PM IST

Insects in Nellai Sweet Shop Snacks: நெல்லையில் உள்ள பிரபல ஸ்வீட் கடையில் வாங்கிய முறுக்கில் பூரான் இறந்து கிடந்ததால், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆகையால் அந்த நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வழக்கு தொடரப் போவதாகவும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லை பிரபல ஸ்வீட் கடையின் முறுக்கில் கிடந்த பூரான்
நெல்லை பிரபல ஸ்வீட் கடையின் முறுக்கில் கிடந்த பூரான் (Photo Credits - ETV Bharat Tamilnadu)

பிரபல ஸ்வீட் கடையில் வாங்கிய முறுக்கில் கிடந்த பூரான்... வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி (Video Credits - ETV Bharat Tamilnadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உடையார்பட்டி யூ.வி நகரில் வசிப்பவர் குரு மகாராஜன். இவர் கடந்த 25ஆம் தேதி நெல்லை பகுதியில் உள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலில் முறுக்கு வாங்கி வந்துள்ளார். அதனைச் சாப்பிட பிரித்து பார்த்தபோது, அதில் பூரான் என்னும் விஷப்பூச்சி இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து குரு மகாராஜன் நெல்லையில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையில் தலைமை ஆய்வாளருக்கு புகார் ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், பொறுப்பற்ற முறையில் முறுக்கு போன்ற தின்பண்டத்தை பேக்கிங் செய்து விற்பனை செய்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொடிய விஷமுள்ள பூரான் உடன் சேர்த்து முறுக்கு தின்பண்டத்தைக் கவனிக்காமல் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு இருந்தால், அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய விளைவுகளுக்கு அந்த நிறுவனம் பதில் சொல்லியாக வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குரு மகாராஜன் கூறுகையில், "கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் ஸ்வீட் கடையில் தின்பண்டங்கள் வாங்கினேன். மறுநாள் அதை பிரித்து பார்த்த போது, அதில் பூரான் இறந்த நிலையில் இருந்தது. இதுதொடர்பாக கடைக்கு நேரில் கொண்டு சென்று புகார் அளித்த போது, குற்றச்சாட்டை கேட்காமல் பணம் கொடுத்து என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னையில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலருக்கும் தபால் மூலமாக புகார் அளித்துள்ளேன். தரமற்ற உணவுப் பொருளை விற்பனை செய்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

நெல்லையில் வாங்கிய முருக்கில் பூரான் இருந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் களமிறங்கும் ராகுல்.. அமேதியை கைவிட காரணம் என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details