சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏர்படுத்தியுள்ள நிலையில் இதுவரை 38 பேர் இதற்கு பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோரின் அலட்சியமே இந்த கொடுங்துயரத்திற்கு காரணம் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கமல்ஹாசன்: இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும், தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பா. ரஞ்சித் டுவீட்:தனது எக்ஸ் (X) வலைதளப்பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர், தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணம் என விமர்சித்துள்ளார்.