சென்னை:சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் நன்மை தீமை மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சியால் ஏற்படும் நன்மைகள் குறித்து நான்கு நாட்கள் கண்காட்சியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். இந்த கண்காட்சி ஜூன் 14 முதல் 17 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பிரத்யேகமாக இந்த கண்காட்சியினை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு (VIDEO CREDITS - ETV Bharat Tamil Nadu) இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் வகையில், பிளாஸ்டிக்கின் மறுசுழற்சி முறையைப்பற்றி விளக்குவதாக இந்த கண்காட்சி இருக்கும்" என்றார்.
பிளாஸ்டிக்கை கைவினையாக்குதல்:மேலும், "நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்க்கும்போது அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாகவும், அதே பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் போது அழகாக இருப்பதாகவும் அதன் அழகு தன்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சி பொறுத்தவரை 6150 மெட்ரிக் டன் அளவிற்கு நாள்தோறும் குப்பைகள் கிடைப்பதாகவும், இதில் 52 விழுக்காடு டிரை வேஸ்ட், 40 விழுக்காடு ஹார்ட் வேஸ்ட், 8 விழுக்காடு தேவையற்ற பிளாஸ்டிக் எனப் பிரிக்கப்படுகின்றன. முன்னர் நாம் தார் சாலை போடுவதற்கு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோம், ஆனால் தற்போது தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு துணி, ஷூ, நாற்காலி, அழகு சாதன பொருட்களைத் தயார் செய்கிறோம்.
தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இந்த கண்காட்சி நிரூபித்துள்ளனர் எனக் கூறினார்.
பிளாஸ்டிக்கும் மறுசுழற்சியும்: மாதவரத்தில் கார்பன் பிளாக் பண்ணக்கூடிய தொழிற்சாலை இருக்கிறது. அங்குத் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான தொழிற்சாலைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது, அதற்காக மும்பை போன்ற மாநகரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குப்பைகளை நீர்நிலைகளில், கடலில், கொட்டாமல் குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் வளர்ச்சி இல்லை. இப்போது தொழில் வளர்ச்சி இருப்பதாகவும் தயவு கூர்ந்து பிளாஸ்டிக் குப்பையை மக்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். இப்போது 60 விழுக்காடு மக்கள் குப்பைகளைப் பிரித்துக் கொடுக்க முன்வந்துவிட்டனர். நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டாமல் அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பை கொட்ட வேண்டும். அதற்கு மக்கள் மனமாற்றம் தேவை. இதுகுறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த மாற்றமும் காணமுடியவில்லை.
மறுசுழற்சியின் மகிமை: மறுசுழற்சி செய்யப்பட்டுள்ள பொருட்களைப் பார்க்கும்போது அது குப்பையிலிருந்து செய்யப்பட்டது போன்று சற்றும் தெரிவதில்லை. அந்த அளவிற்கு அழகாக இருக்கின்றன. எனவே குப்பைகளை நீர்நிலைகளில் கொட்ட வேண்டாம்; குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும். அதனால் நமக்கே நன்மை" எனப் பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கண்ணகி நகரில் மைதானம் அமைத்து தர கபடி வீராங்கனை ஸ்டாலினிடம் கோரிக்கை!