தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சி! - Mano son attack CCTV footage

பாடகர் மனோவின் மகன்களை 10க்கும் மேற்பட்டோர் கட்டை, கல் உள்ளிட்டவற்றால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனோ மனைவி, தாக்குதல் நடத்தும் சிசிடிவி
மனோ மனைவி, தாக்குதல் நடத்தும் சிசிடிவி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 10:59 PM IST

சென்னை: பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனோ மனைவி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனோவின் இரண்டு மகன்கள் உட்பட 3 நபர்கள் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் ஆகியோரை 4 இருசக்கர வாகனங்களில் வந்த 16 வயது சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கல், கட்டையால் கண்மூடித் தனமாக தாக்குகின்றனர். அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பின்னரே சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் இருந்த போலீசார் வந்துள்ளனர். இந்த புதிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"எனது மகன்கள் தலைமறைவாக இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்" - பாடகர் மனோவின் மனைவி வேண்டுகோள்!

இந்நிலையில், மனோ மனைவி ஜமிலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னிடம் ஆதாரம் இல்லையென்பதால் நான் இவ்வளவு நாள் பேசவில்லை. இப்போது ஆதாரம் இருப்பதால் பேசுகிறேன். இந்த வீடியோவை பார்த்தால் உண்மை தெரியும். சம்பவம் நடந்த அன்று காவலர்கள் வந்த உடன் தாக்குதல் நடத்திய அனைவரும் ஓடிவிட்டனர். காலையில் அவர்களை அழைத்துவந்து மன்னிப்பு கேட்க வைப்பதாக காவலர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், அதற்குள் தவறான வீடியோ வெளியாகியது. எனது மகன்களை அவர்கள் அடித்தது வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் எங்களிடம் விசாரிக்கவே இல்லை. அவசர கதியில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த அசிங்கத்தால் தற்போது எனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தெரியவில்லை. அவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது வெளியில் நேரில் வர வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் என கூறுகிறார்கள், 16 வயது சிறுவன் என்றால் எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்யலமா?” என கேள்வியை முன்வைத்தார்.

மனோவின் மருமகள் கூறுகையில், “எனது கணவரும், அவரின் அண்ணனும் ஏன் தவறாக பேசுகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்குள் வாகனத்தில் வந்தவர்கள் தாக்க ஆரம்பித்துவிட்டனர். கல், கட்டையெல்லாம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. கண்மூடித்தனமாக தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை.

இதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. எனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது. பாதுகாப்புக்காக நாங்கள் புகார் அளிக்க உள்ளோம். வீட்டில் வேலை செய்தவர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details