பெரம்பலூர்:சொத்து தகராறில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கிய வைரலாக பரவி வந்த நிலையில், மகனை கைது செய்த கைகளத்தூர் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68) இவரது மனைவி ஹேமா( 65). இவர்களுக்கு சக்திவேல் (34) என்ற மகனும், சங்கவி (32) என்ற மகளும் உள்ளனர். குழந்தைவேலுவுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்ப்புதூரில் சேகோ ஆலையும், பெரம்பலூரில் அரிசி ஆலையும், விவசாய தோட்டமும் உள்ளது. சக்திவேல் ஆத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துக்களை தனக்கு எழுதி வைக்கும் படி குழந்தைவேலுவிடம் சக்திவேல் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குழந்தைவேல் மறுத்ததால், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பெரம்பலூரில் உள்ள தந்தையின் வீட்டுக்கு சென்று, வீட்டில் இருந்த குழந்தைவேலை சக்திவேல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் ஆத்திரம் தீராத சக்திவேல், மீண்டும் தந்தையை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனம் உடைந்த நிலையில் இருந்த குழந்தைவேல், ஏப்ரல் 18ஆம் தேதி உயிரிழந்தார். குழந்தைவேலுவை மகன் சக்திவேல் தாக்கிய சம்பவம் அவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.