தென்காசி:தென்காசியில் இருந்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான கனிம வள லாரிகள் சென்று வருகிறது. இந்தநிலையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி செங்கோட்டை பகுதியில் இருந்து சுரண்டை பகுதிக்கு கனிம வளம் ஏற்றிச் செல்வதற்காக வந்த டிப்பர் லாரி தென்காசி - மதுரை நெடுஞ்சாலையான ஈனா விளக்கு பகுதியில் வந்தது.
அதேநேரம், ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஈனா விளக்கு ரவுண்டானா பகுதியைக் கடந்து செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனிமவள லாரி, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 வயது சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி போலீசார், காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துராஜ் தினேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.