வேலூர்:வேலூர் மாவட்டம் வேலூர் மெயின் பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர், செண்பாக்கம் பகுதியில் நீச்சல் பயிற்சி குளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிமுக மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர், ஓயாசிஸ் நீச்சல் குளம் பகுதியில் இவர்களுடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
பிறகு வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தின் சீட்டு கிழிக்கப்பட்டிருந்ததால், இது குறித்து அங்குள்ள வாட்ச்மேன் சீனிவாசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எங்களுடைய ஓனர்தான் இருசக்கர வாகனத்தின் சீட்டுகளை கிழித்தார் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் ஆனந்த், மற்றொரு அதிமுக பிரமுகர் டக்கர் ஜானகிராமன் ஆகியோர், மெயின் பஜாரில் உள்ள நகைக்கடைக்குச் சென்று, அதன் உரிமையாளர் ஆனந்த்-யிடம் ஏன் வாகனத்தின் சீட்டை கிழித்தாயென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆனந்தை அரவிந்த் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ஆனந்த், இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.