ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கேத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், இவர் எல்.ஐ.சி-யில் முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், ஸ்ரீதர் மற்றும் சுகந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.19) இரவு வீட்டினில் கதவைப் பூட்டிவிட்டு, நடராஜ் வீட்டில் உள்ள ஒரு அறையிலும் அவரது மனைவி காஞ்சனா வெளி அறையிலும் இரண்டு மகன்களும் வெவ்வேறு அறைகளிலும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையன் நடராஜ் வீட்டின் உள்ளே சென்றுள்ளான்.
இதன் பின்னர் வீட்டின் கதவைத் திறக்க முயற்சித்த போது வீட்டின் உள்பகுதியில் பூட்டியிருந்ததை அறிந்த கொள்ளையன் வீட்டின் வெளியே நீண்ட நேரமாகக் காத்திருந்ததாகத் தெரிகிறது, அதனைத் தொடர்ந்து நடராஜ் அதிகாலையில் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் திடீரென வெளியில் பதுங்கி இருந்த கொள்ளையன் வீட்டின் உள்ளே சென்றபோது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனா கொள்ளையனைப் பார்த்துச் சத்தமிட்டுள்ளார். இதனால், காஞ்சனா முகத்தைத் துணியால் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யும் முயற்சியில் கொள்ளையன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.