சென்னை:சாலையில் நடந்துச் சென்ற சிறுமியை தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியை நாய்கள் துரத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெரம்பூர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் அமித். இவரது மகள் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மே 18) வெளியே சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது நான்கு தெரு நாய்கள் சிறுமியை கடிப்பதற்காக துரத்தியுள்ளது. இதனால் பதற்றமடைந்த சிறுமி நாய்களிடம் இருந்து தப்ப அங்கிருந்த வீட்டை நோக்கி ஓடியுள்ளார்.
இருப்பினும் சிறுமியை சுற்றி வளைத்த நாய்கள் சிறுமியை கடிக்க வந்துள்ளன. இதனால் சிறுமி பயத்தில் கத்தியுள்ளார், சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட தாய் தனது மகளை தெரு நாய்கள் துரத்துவதை கண்டு, வேகமாக ஓடி வந்து நாய்களை துரத்தியுள்ளார். மேலும், சத்தம் கேட்டு வந்த அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்த நபரும் நாயை துரத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, ஒரு நாய் கடித்ததில் அதன் பல் தடம் சிறுமியின் உடலில் பதிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு நாய் கடிக்கான தடுப்பூசி போட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடிக்க துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.