சேலம்:எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் கண்டன். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவே இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து ரோஷினியை வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு எடப்பாடி செட்டிாங்குறிச்சி பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜன.23) மதியம் 3.30 மணி அளவில் காரில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனுஷ் வீட்டிற்குள் புகுந்து ரோஷினியை கடத்தி சென்றனர்.