தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணியூர் ஊராட்சியின் புதிய முன்னெடுப்பு.. பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான சிசிடிவி கட்டுப்பாட்டு அறை!

பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உருமாற்றம் செய்து திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக கையாளும் கணியூர் ஊராட்சி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

கணியூர் ஊராட்சி மன்றம்
பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தி உருவாகப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் பயணியர் நிழற்குடை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 9:58 PM IST

Updated : Nov 11, 2024, 10:22 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில் சுமார் 14 குக்கிராமங்கள் உள்ளது 12 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 12 வார்டுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க 50 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மக்கும் குப்பையையும் மற்றும் 300 கிலோ மக்காத குப்பையையும் சேகரித்து வருகின்றனர்.

தரம் பிரிக்கப்படும் குப்பைகள்: கணியூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரங்கள் தயாரிக்கவும் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு அவை கூலாக அரைக்கப்பட்டு தார் சாலை அமைப்பது உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனில்லாத இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அரைத்து அதன் மூலம் ஏதாவது மதிப்பு கூட்டுப் பொருள் செய்ய வேண்டும் என எண்ணிய ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி பல்வேறு நிறுவனங்களுடன் இது குறித்து விவாதித்துள்ளார்.

கட்டுமான பொருளாக உருவெடுத்த பிளாஸ்டிக் கழிவுகள்: இதன் தொடர்ச்சியாக, கோவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பிரசாந்த் என்பவரை வேலுச்சாமி தொடர்பு கொண்டு இது குறித்து பேசுகையில் இருவரும் சேர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த முடியும் என ஆலோசித்துள்ளனர்.

இதன் விளைவாக, அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தரமான சீட்டுகள் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கணியூர் ஊராட்சியில் சேகரிக்கப்பட்டு அரைக்கப்பட்டிருந்த 260 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மூலப்பொருளாகக் கொண்டு பிளாஸ்டிக் சீட்டுகள் உருவாக்கினர்.

புதிய கட்டுப்பாட்டு அறை: ஊராட்சியில் பொருத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிளாஸ்டிக் சீட்டுகளால் ஆன கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது ஒரு புதிய பயணியர் நிழற்குடையும் இந்த பிளாஸ்டிக் சீட்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

கணியூர் ஊராட்சி மன்ற தலைவரின் நோக்கம்: கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி கூறுகையில்,"எங்களுடைய ஊராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து, தார் சாலை அமைப்பதற்காக கொடுத்து வந்த நிலையில், இன்னும் இதனை வெவ்வேறு வழிகளில் மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என ஆலோசித்து, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு கட்டுமானத்திற்கு தேவையான பிளாஸ்டிக் சீட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் டோட்டலி வேஸ்ட்; நெல்லை மாநகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்ட நீதிபதிகள்!

அதன் விளைவாக, 260 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சீட்டுகள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமாரக்களுக்கான கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களுடைய தூய்மை பணியாளரிடம் குப்பைகளை கொடுக்கும் போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுப்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக கையாண்டு அதனை அரைத்து இதுபோல மறுசுழற்சி செய்து வருகின்றோம்.

ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற ஊராட்சி: இது மட்டுமில்லாமல் கணியூர் ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். இதில் மா, பலா, கொய்யா என கனி தரும் மரங்கள் மட்டுமல்லாமல் மூலிகை மரங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், கணியூர் ஊராட்சி கோவை மாவட்டத்தில் ஐ.எஸ்.ஓ சான்றிதழை பெற்ற ஒரே ஊராட்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 11, 2024, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details