மதுரை:சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில், அவர் வழக்குப்பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல, சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும்.
சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பைக் குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும், சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தியுள்ளார். தற்போது இவர் மீது சிபிஐ பொய்யான ஒரு குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனையடுத்து, டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில், பொன்மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், “பொன்மாணிக்கவேல் இந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணையை ஒருதலைபட்சமாக நடந்ததாகவும், காதர் பாட்ஷா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும், அதே நிலையில் உள்ள மற்ற காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். மேலும், சுபாஷ் கபூர் ஆகியோரை பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட்டு உள்ளார். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார்.