சென்னை: சென்னை துறைமுகத்தில் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு நான்கு இழுவை கப்பல்கள் மற்றும் அன்னம் என்கிற எண்ணெய் மீட்பு கப்பல் உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதில், அப்போது துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய புகழேந்தி என்பவர் 70 லட்சம் ரூபாய் முறைகேடாக லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த புகார் குறித்து துறைமுக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து டெண்டர் விடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்போது துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற புகழேந்தி என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் சென்னை மந்தைவெளியில் உள்ள சன்சைன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது.