சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வி.சி.தனலட்சுமி (55). இவர் காஞ்சிபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக (Postal Assistant) பணியாற்றி வந்தார். கடந்த 2007 முதல் 2011 வரை திருவாலாங்காடு தபால் நிலையத்தில் இவர் பணியாற்றிய போது, தொடர் வைப்பு நிதியில் (RD account) முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ (CBI) நடத்திய விசாரணையில், 'திருவாலாங்காடு தபால் நிலையத்தில் தொடர் வைப்பு நிதி (ஆர்.டி.) செலுத்தி வந்த 191 பேரின் கணக்கை முழுமையாகவும், பகுதியாகவும் முடித்து 38 லட்சத்து 81 ஆயிரத்து 450 ரூபாய் முறைகேடு செய்ததும், ஆர்.டி கணக்கு வைத்திருந்தவர்களின் கையெழுத்து அல்லது கைரேகையை மோசடியாக போட்டு இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தனலட்சுமி மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 409 நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் 2017 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி மலர்வாலண்டினா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்கான தண்டனை குறித்து தனலட்சுமியிடம் நீதிபதி கேள்வி எழுப்பிய போது, 'முறைகேடு செய்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டேன். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'குற்றம்சாட்டப்பட்ட தனலட்சுமி 38 லட்சத்து 81 ஆயிரத்து 450 ரூபாயை முறைகேடு செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். அந்த பணத்தை அரசுக் கணக்கில் திரும்பச் செலுத்தி உள்ளார். முறைகேடு செய்த பணத்துக்கான சாதாரண வட்டி மற்றும் அபராத வட்டியாக 16 லட்சத்து 50 ஆயிரத்து 932 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரத்தை மட்டும் அவர் செலுத்தி உள்ளார்.
முறைகேடு செய்யப்பட்ட பணம் பொதுப்பணம். அரசுக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து எடுத்துள்ளார். எனவே, அவருக்கு எந்த கருணையும் காட்ட முடியாது. எனவே, தனலட்சுமி மீதான 5 சட்டப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக 2 ஆண்டு சிறைத் தண்டனையும், மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறைத் தண்டனையை அவர் ஏக காலத்தில் (2 ஆண்டுகள் மட்டும்) அனுபவிக்க வேண்டும்' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு குளறுபடி: தேசிய தேர்வு முகமையிடம் விளக்கம் கோரும் உயர் நீதிமன்றம்! - madurai bench of madras high court