சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி வழக்கு தொடர்பாக, மூன்று பேரின் வாக்குமூலம், அதன் வீடியோ காட்சிகள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் நேற்று(ஏப்.28) சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட மூன்று நபர்கள் மீதும் நான்கு பிரிவின் கீழ் இன்று(ஏப்.29)வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.