சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இதனை கொண்டு வந்ததாக நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பணம் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த பணம் சென்னையில் பல்வேறு இடங்களில் கைமாறிக் கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பின்னர் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆவணங்களை பெற்ற பின்பு, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை வீடியோ பதிவாக செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சில இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் அழைத்து, இந்த பணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.