தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல் வழக்கு; காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி விசாரணை.. வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை! - Vengaivayal Case investigation - VENGAIVAYAL CASE INVESTIGATION

CB-CID investigation on Vengaivayal Case: வேங்கைவயல் விவகாரம் குறித்து காவலர் முரளி ராஜாவிடம், சிபிசிஐடி போலீசார் சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

CBCID investigation on Vengaivayal Case
சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட காவலர் முரளி ராஜா (நடுவில் இருப்பவர்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 9:03 AM IST

புதுக்கோட்டை: வேங்கைவயலில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக காவல்துறை மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரையில் 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதில் மனித மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியை எடுத்து சந்தேகத்திற்கிடமான 31 நபர்களுக்கு இதுவரை டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, சம்பவம் நடந்தபோது பகிரப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரல் பதிவுகளை சேகரித்து, அது யாருடைய குரல்? என்பதை உறுதி செய்வதற்கு, 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி ராஜாவிற்கு சிபிசிஐடி போலீசார் 41A சட்டப்பிரிவின்படி சம்மன் அனுப்பப்பட்டு நேற்று (மே 23) காலை முரளி ராஜா புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

இதனை அடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் முரளி ராஜாவிடம் காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை சுமார் ஏழரை மணி நேரம் தொடர்ந்து விசாரணை செய்தனர். இதில் பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சம்பவ தினத்தன்று இவர் தன்னுடைய வாட்ஸ் மெசேஜில் பலருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவர் அனுப்பிய தகவலை ஒப்பிட்டுப் பார்த்துதான் இவருக்கு ஏற்கனவே குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. இவரிடம் தொடர்பிலிருந்த மூன்று நபருக்கும் கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவரது குரல் மாதிரி ஒத்துப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தொடர்பாகதான் தற்போது நடைபெற்ற விசாரணையில், காவலர் முரளி ராஜாவிடம் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில் பல்வேறு வாக்குமூலங்கள் அவரிடம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய வாக்கு மூலத்திலிருந்து இவர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதும் உறுதியாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இரு தினங்களில் கூடுதலாக இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விசாரணை குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் பேசுகையில், "இன்றைய தினம் விசாரணை முடிந்து முதலில் காவலர் முரளி ராஜாவை அனுப்பியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் அவரை அழைத்து விசாரணை செய்வோம். விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்த முடிவுகள் இதுவரை வரவில்லை. நீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்குள் விசாரணை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும் கிடைக்கக்கூடிய சாட்சிகள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து வழக்கு முடிவுக்கு வரும் காலம் நிர்ணயிக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் 4 பேர் கைது எனத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details