சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் எஸ்பி-க்கு அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்தது.
இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காத நிலையில், ராஜேஷ் தாஸை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மார்ச் 8ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அவரை கைது செய்வதற்கு சென்றபோது, வீட்டில் அவர் இல்லை எனவும், அதனால் அவருக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவரது பாஸ்போர்ட்டை முடக்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு பரிந்துரைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி பதில் மனுவுக்கு பதிலளித்து வாதங்களை வைப்பதற்கு ராஜேஷ்தாஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோயில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் தொல்லை.. திருப்பூரில் நிகழ்ந்த கொடூரம்.. 7 பேர் அதிரடி கைது!