சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இதுவரை 8 நபர்களை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து இவ்வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலப்பதற்கு சப்ளை செய்த நபர்கள் யார்? என்ற கோணத்தில் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக சின்னதுரை கைது செய்யப்பட்டார். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜோசப் ராஜ், மதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இது தொடர்பாக மாதேஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சிலரிடம் மெத்தனால் வாங்கியதும், அதில் சிவா என்ற சிவகுமார் என்பவர் மொத்தமாக மெத்தனாலை வாங்கி வந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்ததும் இவருக்கு துணையாக பண்ருட்டி சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் ஆகிய இருவரும் பல்வேறு இடங்களுக்கு இவற்றை சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மேலும் மூவர் கைது! - Kallakurichi Illicit Liquor Case
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் நடத்திய விசாரணையில், பண்ருட்டியில் பிரபல சிப்ஸ் கடை உரிமையாளர் சக்திவேலின் ஜிஎஸ்டி (GST) பில்லை பயன்படுத்த, மாதேஷ் விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 3 முறை தலா 1,000 லிட்டர் தின்னரை (Paint Thinner) வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விருத்தாச்சலம் தனியார் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்தும் தின்னர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளியாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமார் சென்னை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், மாதேஷ் ஹோட்டலுக்கு வந்து மெத்தனாலை ஓட்டலில் வைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து பல பேரல்களில் மெத்தனால் கைப்பற்றப்பட்டது. இதனால், இந்த இரண்டு சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.5.95 கோடியில் உள்நாட்டு நாய் இனங்களுக்கு புதிய பாதுகாப்பு மையம்; தமிழக அரசு அறிவிப்பு!