சென்னை:சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெரால்ட். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் இவர் வீட்டின் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மதிய உணவுக்காகச் சென்றுள்ளார். அப்பொழுது, இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ராட்வீலர் நாய், சிறுவனை துரத்தி வெறித்தனமாக கடித்துள்ளது.
இதனை அடுத்து, நாயிடம் சிக்கிய சிறுவனின் அலறல் மற்றும் அழுகை குரல் கேட்டு வீட்டில் இருந்த சிறுவனின் தந்தை ராட்வீலர் நாயை விரட்டினார். ஆனாலும், தொடர்ச்சியாக அந்த நாய் சிறுவனை துரத்தி துரத்தி கடித்ததால் அவருக்கு தலை, முதுகு, கழுத்து மற்றும் காது உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் காதிலிருந்து வழிந்த ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்த சிறுவன் வலி தாங்காமல் கதறியுள்ளார். இதனை அடுத்து, சிறுவனின் தந்தை உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த ராட்வீலர் நாயின் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் தந்தை புகார் அளித்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஜோஸ்வா அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நாய் உரிமையாளர் ஜான் பெட்ரிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நாய் உரிமையாளர் ஜான் பெட்ரிக் மீது விலங்குகளை அஜாக்கிரதையாகப் பயன்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்களவே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நாய் உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சேலம் டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டமா? 20 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு!