தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை? - தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி! - சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு

Madras High Court: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 6:23 PM IST

சென்னை:சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜன.23) விசாரணைக்கு வந்த போது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் V.T பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்குத் தெரிவித்ததுடன், அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கைத் தொடர்ந்து நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், “தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்பு உள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது” எனவும் குறிப்பிட்டார். மனுதாரர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது, சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை என்றும், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக பி.எஸ் ராமன் குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழகச் சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், இது சம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனு!

ABOUT THE AUTHOR

...view details