தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 12வது தெரு மங்களபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ்(49). இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2023 ஆகஸ்ட் வரை தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று, நடந்த சிறப்பு மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கூட்டுறவு துறை ஆய்வாளர் தனலட்சுமி, சங்கர் கணேஷை உடல் ஊனத்தை குறிப்பிட்டும், சாதியை சொல்லியும் திட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரிடம் புகார் அளிக்க சென்றபோது, அந்த அலுவலக கண்காணிப்பாளர் ஜோ, பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், போலீசிலும் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது.
ஆனால்,சங்கர் கணேஷ்(49) புகார் அளித்து 5 மாதங்களாகியும் தனலட்சுமி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கூட்டுறவு அதிகாரி தனலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சங்கர் கணேஷ் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் கூறுகையில், "தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலையில் (0.1020) 2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை 5 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பு வகித்து வந்தேன். அதையடுத்து பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், அதன் பின்னர் தேர்தல் நடைபெறாததால், தற்போது கூட்டுறவுத் துறை இயக்குநராக தனலெட்சுமி செயல்பட்டு வருகிறார்.
சாதி பெயரை சொல்லி திட்டிய அதிகாரி:நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில், இடது கை மணிக்கட்டு தூண்டாகி மாற்றுத்திறனாளியாகிவிட்டேன். நான் தலைவராக இருந்தபோது, அடிக்கடி தனலெட்சுமி கூட்டுறவு பண்டகசாலைக்கு மாதம் ஒருமுறை கண்காணிக்க வருவார். எனவே என்னை பற்றியும் நான் என்ன சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதை பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும்.