திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று(ஏப்.2) மன்சூர் அலிகான் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அலுவலர் அகமது ஜலாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் மன்சூர் அலிகானிடம் தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியில்லாமல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது எனக் கூறியபோது, நான் பிரச்சாரத்திற்காகத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தால் தேர்தல் முடிந்த பின்னர் தான் அனுமதி வரும் எனத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டும் தோணியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த பிரச்சாரத்தில் பேசிய மன்சூர் அலிகான்,"நான் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கின்றேன். என்னுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி. ஆனால், திமுகவினருக்கு வாக்கு அளிக்காதீர்கள். நான் மதவாதத்திற்கு எதிரானவன்.
மேலும் தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன் இதுவரையில் பாலாற்றில் ஒரு அணை கூட கட்டவில்லை. நான் வந்தால், அனைத்து மலைகளையும் காப்பேன் எனப் பொதுமக்களிடம் கூறி தீவிரமாக வாக்கு சேகரித்தார்". அதனைத் தொடர்ந்து ஆம்பூர் புறவழிச்சாலை, நேதாஜி சாலை, ஆம்பூர் பஜார் பகுதி, காதர்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி அகமது ஜலாலுதீன் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மன்சூர் அலிகான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் 19 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆம்பூரில் உரிய அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ராமோஜி அகடாமி ஆப் பிலிம்ஸ் இலவச திரைப்பட பயிற்சி வகுப்புகள்! எப்படி விண்ணப்பிப்பது? - Ramoji Academy Of Movies