தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை அருகே இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு...காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! - TWO YOUTHS KILLED CASE

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கள்ள சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட ஹரிஷ் (25),ஹரிசக்தி (20)
கொல்லப்பட்ட ஹரிஷ் (25),ஹரிசக்தி (20) (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 7:42 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் மெத்தனமாக இருந்ததாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிஷ் (25), பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தட்டிக் கேட்டதாக பொதுமக்கள் கூறினர்.

இந்த இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர் காவல் நிலையத்தை சேர்ந்தோர் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றும் பொதுமக்கள் கூறினர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெரம்பூர் காவல் ஆய்வாளராக உள்ள நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்ததால் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மலைச்சாமியை பெரம்பூர் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details