மயிலாடுதுறை: மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்குs சொந்தமான வணிக கட்டிடத்தில் பிரபல பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில், நேற்று சுகாதார ஆய்வாளர் பிருந்தா, நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் ஆய்வுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையை பூட்டி சீல் வைத்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல, கடைக்கு சீல் வைக்க கூடாது என்று பிரியாணி கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், டிஎஸ்பி திருப்பதி மற்றும் போலீசார் கடையில் இருந்த உணவுகள் மற்றும் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.