சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரையில், 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். வட சென்னை பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட பலர் விசாரணை மையத்தில் உள்ளனர். தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (ஆக.09) பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, போராட்டத்தில், கலந்துகொண்ட 1000க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர், மறைந்த ஆம்ஸ்ட்ராங் உருவம் பதித்த முகமூடி அணிந்தும், படுகொலைக்கு நீதி கேட்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மேடையில், இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருமதி ஆம்ஸ்ட்ராங் அவருடைய மகளுடன் தொலைதூர நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் இறப்பிற்கும் பிறகு அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.