தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 2:28 PM IST

ETV Bharat / state

மேத்யூ சாமுவேலுக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: மாஸ்டர் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

Case against Mathew Samuel: டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Case against Mathew Samuel
Case against Mathew Samuel

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, 1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்ற தனி நீதிபதி, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு ஜன. 18 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் உத்தரவின்படி ஜன.30 மற்றும் 31ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாகப் பழனிச்சாமி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், இன்று (ஜன.31) பட்டியலிடப்பட்டு இருந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை. அவர் தரப்பில் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில், மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த மனு நிலுவையில் உள்ளதால் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட மாஸ்டர் நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:துணை மருத்துவ கவுன்சில் தலைவர்களை 2 மாதங்களில் நியமிக்கவும் - சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details