சேலம்: புதுக்கோட்டையில் உள்ள அம்மா பட்டணம் பகுதியைச் சேர்ந்த அனிபா என்பவரும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் அனிபா, இஸ்மாயில் உள்பட ஐந்து மாணவர்கள், திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்காக மூன்று பைக்குகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
இதில் அனிபாவும், இஸ்மாயிலும் ஒரே பைக்கில் பயணித்துள்ளனர். இருவரும் இன்று காலை சேலம் அருகே உள்ள அரூர் மெயின் ரோடு, சுக்கம்பட்டி அடுத்த கோமாளி வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பாப்பிரெட்டிபட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அனிபா ஓட்டிச் சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற மாணவர்கள் அனிபா, இஸ்மாயில் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.