சென்னை:கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு பெண்களுக்கான கட்டணமில்லா அரசுப் பேருந்து திட்டமான விடியல் பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டத்திலிருந்தே பாராட்டுகளையும், விமர்சனங்களையும் ஒருங்கெ பெற்று வந்த நிலையில், இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திலும், சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதாக சிஏஜி - சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் (Citizen consumer and civic Action) என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சிஏஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய 6 நகரங்களில் உள்ள 3 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டம் மூலம் பெண்கள் பேருந்து சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களை பெண்கள் பயன்படுத்துவது குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தால் பயன் பெறும் பெண்கள் மாதம் தங்கள் வருமானத்தில் 800 ரூபாய் பிடித்தம் செய்ய முடிவதாகவும், இந்த சேமிப்பை கல்வி, சுகாதாரம் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை வழங்குவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இது சமூகத்திற்கான மற்றும் நாட்டிற்கான நீண்ட காலப்பலன்களை அளிப்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதிகமான பெண்கள் பொதுப்போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் பெண்களின் நடமாட்டம், பாலின சமத்துவத்தில் சம நிலைப்பாடு ஆகியவற்றை இத்திட்டம் உறுதிசெய்வதும் ஆய்வின் முக்கிய முடிவுகளாக தெரிய வந்துள்ளன.