விழுப்புரம்: பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். மேலும், த.வெ.கவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
த.வெ.க தலைவர் விஜய் கடந்த வாரம், கட்சியின் கொடி மற்றும் பாடலையும் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக் கொடியின் பின்னணியில் உள்ள வரலாறை த.வெ.க முதல் மாநாட்டில் கூறுவேன் என விஜய் தெரிவித்துள்ளார். அதே போல் மாநாடு எப்போது நிகழும் என்ற தகவலை விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தவெக மாநாடு திருச்சி அல்லது சேலத்தில் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறுவதற்கு, உரிய அனுமதி அளிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (ஆகஸ்ட் 28) விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து மனு அளித்தார்.
அந்த மனுவில், 'விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தவெக மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடத்தவும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்தவும் மொத்தமாக 153 ஏக்கரை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.