விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதுதொடர்பாக ஐ.ஜி அஸ்ரா கார்க் மற்றும் வடக்கு மண்டல டி.ஐ.ஜி திஷா மித்தல் மற்றும் விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ் ஆகியோர் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநாடு தொடர்பான ஆலோசனைக்காக காவல் துறை உயர் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று நேற்றைய தினம் (அக்.09) மாலை மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாநாட்டில் கழிவறை வசதிகள், குடிநீர், கார் பார்க்கிங் வசதிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்ததாகவும் காவல்துறை விதித்த நிபந்தனைகளை முழுமையாக கடைப்பிடித்து காவல்துறைக்கு உரிய ஆதரவு அளிப்போம்.
கடந்த 8ஆம் தேதி எஸ்.பி மற்றும் டி.ஐ.ஜி ஆகியோருடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட நிலையில், ஐ.ஜி அஸ்ரா கார்க் நேரடியாக வருகைதந்து மாநாடு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:தவெக மாநாடு.. விஜய்க்கு சீமான் கொடுத்த அட்வைஸ்!
அதுமட்டும் அல்லாது, மாநாட்டில் காவல்துறை ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெறுகிறதா? என்று காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மாநாட்டிற்கான பணிகளை, மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் துபாய் நாட்டின் விவிஐபி பாதுகாப்பு நிறுவனம் மாநாடு பாதுகாப்பு வேலைகளுக்காக த.வெ.க-வுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு திடலில் பொதுமக்களை எப்படி அமர வைப்பது, கூட்ட நெரிசலை எப்படித் தவிர்ப்பது, உணவு வழங்குவது உள்ளிட்டவை குறித்த விரிவான திட்டத்தை விவிஐபி பாதுகாப்பு நிறுவனம், விஜய், புஸ்ஸி ஆனந்த் மற்றும் இதர நிர்வாகிகளிடம் வழங்கியிருக்கிறது.
அதன் அடிப்படையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை, மாநாடு ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடுத்தவும், அதற்காக அவர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சியை வழங்கவும் திட்டமிட்டபட்டுள்ளது. இந்த நிலையில், மாநாட்டில் 100 மருத்துவர்கள், 200 துணை மருத்துவர்கள் பணியில் அமர்த்தவும், மாநாட்டு திடல் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் டேங்க் வைக்கவும் மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்