சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். அதையடுத்து அத்தொகுதி காலியானத் தொகுதியாக அறிவிக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும், அதிமுகவும் பின்வாங்கியுள்ள நிலையில், திமுக சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் வேட்பாளர் சீதா லட்சுமியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு.
அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு - 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அறிகுறி - அமைச்சர் உறுதி!
அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவரின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.