கிருஷ்ணகிரி:தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் வசிக்கும் மக்கள் திருவண்ணாமலை, வேலூர், சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க நேற்று முதல் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில் மூலம் படையெடுத்து வருகின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவான இன்று, பல்வேறு தொழிற்சாலைகளில் விடுப்பு வழங்கப்பட்டதால் தொழிலாளர்களின் கூட்டத்தால் ஒசூர் பேருந்து நிலையம் திருவிழாவை போல காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தும், பேருந்துகள் இன்றி கைக்குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையும் இன்று குறைந்து காணப்படுவதாக கூறும் பயணிகள் இன்று மாலைக்குள் வாக்களிக்க பேருந்து வசதிகளை செய்து தர அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாடு முழுவதும் 11 மணி நிலவரப்படி 24.37 சதவிகித வாக்குகள் பதிவு! - Tamilnadu Voter Turnout