சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு பட்டக்கத்தியுடன் வந்த மேலும் இருவர், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த பார்த்த போது, அந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆம்ஸ்ட்ராங்கை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து செம்பியம் போலீசார், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கைப்பற்றி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து 8 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆற்காடு பாலா, ராமு, திருவங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 நபர்கள், அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் தாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரணடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சரணடைந்தவர்களிடம் கடந்த வருடம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங் பெயரும் அடிபட்ட நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். சரணடைந்தவர்களில் ஒருவரான அருள் என்பவர், "அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.