தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கையின் காதலை ஏற்க மறுத்த இளைஞரைக் கொன்ற அண்ணன்.. கொடைக்கானலில் நடந்த கொடூரம்!

Kodaikanal Murder: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில், தனது தங்கையின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தர்ம மந்திரி மற்றும் அவரது நண்பர் காளி
கைது செய்யப்பட்ட தர்ம மந்திரி மற்றும் அவரது நண்பர் காளி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 1:34 PM IST

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் குணா என்ற குணால் (24). இவர், தனது உறவினர்கள் உடன் வெளியூரில் பைனான்ஸ் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த இளம்பெண், குணாலை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், குணால் அப்பெண்ணின் காதலை ஏற்க மறுத்ததுள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, மகள் இறந்த துக்கத்தில் அப்பெண்ணின் தந்தை விஜயராஜனும் இறந்ததாகக் கூறப்படுகிறது. தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு குணால்தான் காரணம் என்று எண்ணிய விஜயராஜனின் மகன் தர்ம மந்திரி (23) என்பவர், குணாலை பழிவாங்கும் நோக்கத்துடன், குணாலை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பூம்பாறை கோயில் திருவிழா முடிந்தவுடன், இதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் காளி என்பவர் உடன் குணாலை கொல்வதற்கு தர்ம மந்திரி முடிவு செய்துள்ளார். இதை அடுத்து, நேற்று (பிப்.8) இரவு தனது நண்பர்களுடன் நடந்து சென்ற குணாலை வழிமறித்த தர்ம மந்திரியும், அவரது நண்பர் காளியும், குணாலிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தர்ம மந்திரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாலை பல இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குணால், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் தர்ம மந்திரியும், காளியும் தப்பி ஓடிவிட்டனர்.

இது பற்றி குணாலின் தந்தை தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்து, இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றவர்களை தேடி உள்ளனர். தோட்டத்துப் பகுதியில் மறைந்திருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, குணாலை குத்திக் கொன்ற தர்ம மந்திரி மற்றும் அவரது நண்பர் காளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு தனது தங்கை குணாலை காதலித்ததாகவும், ஆனால் அவரின் காதலை குணால் ஏற்க மறுத்ததால், மனமுடைந்த தனது தங்கை தற்கொலை செய்து இறந்ததாகவும், அந்த சோகத்தில் தனது தந்தை இறந்ததாகவும், தனது குடும்பமே நிர்மூலமானதற்கு குணால்தான் காரணம் என்ற காரணத்தினால், கடந்த ஓராண்டாக பழிவாங்க துடித்துக் கொண்டிருந்ததாகவும் தர்ம மந்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வழக்கறிஞர் வீட்டில் பாய்ந்த ஏகே 47 ரக துப்பாக்கி குண்டு; வீட்டைச் சுற்றி மேலும் 6 குண்டுகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details