ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி புனிதா (30) என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், சாத்தூரில் உள்ள தங்களது பூர்விக இடத்தில் சரவணன் புதிதாக வீடு கட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சரவணன் அடிக்கடி தனது உடன் பிறந்த சகோதரர்களான சத்தியமூர்த்தி (28) மற்றும் சவுந்தர்ராஜன் (26) ஆகியோருடன் மது அருந்துவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
ஆனால், தம்பிகள் இருவருக்கும் திருமணமாகாததால், வீடு கட்டுவதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சரவணன் தனது சகோதரர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருக்கும், அவரது சகோதரர் சத்தியமூர்த்திக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் எழுந்து சண்டையாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அருகில் இருந்த கட்டையை எடுத்து சரவணனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதனைத் தடுக்க முயன்ற இளைய தம்பி சவுந்தரராஜனையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த ஆற்காடு கிராமிய போலீசார், மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவேற்காடு வீடுகள் இடிப்பு விவகாரம்: கார்ப்பரேட்டுகளை சீண்டி பார்க்காத அரசு என திருமாவளவன் சாடல்!