பெங்களூரு:ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதற்கு 6 பெட்டிகளுடன் வீடியோ, போட்டோகிராபரை அழைத்து வரும் படி தமிழ்நாடு அரசுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட சொத்துகளை ஒப்படைக்குமாறு ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை பெங்களூரு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், ஆர்டிஐ ஆர்வலர் டி நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்த பொருட்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேட்டிருந்தார். இதையடுத்து இந்த மனுவை, பெங்களூரு 36ஆவது நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது வரும் பிப்ரவரி 14, 15ஆம் தேதிகளில் ஆஜராக வேண்டும் என நரசிம்ம மூர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கு 6 டிரங்க் பெட்டிகள் கொண்டு வருவதுடன், வீடியோகிராபர், போட்டோகிராபர் ஆகியோரையும் தமிழ்நாடு அரசு அழைத்து வரவேண்டும் எனவும் பெங்களூருவின் 36ஆவது நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி தெரிவித்துள்ளார்.