தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பயணிகள் அச்சம்! - BOMB THREAT

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மோப்ப நாய் உதவியிடன் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார்
தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 3:45 PM IST

சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மோப்ப நாய் உதவியிடன் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக சென்னையில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், பிரபல ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையத்திற்கு, அடையாளம் தெரியாத நபர்கள் இமெயில் மூலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வரும்போதும் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளி, மருத்துவமனை, விமான நிலையங்கள் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்துகின்றனர். இதன் பின்னர் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதைக் கண்டறிகின்றனர்.

தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இமெயில் ஐடி முகவரிகள், அவை எந்த கணினியில் இருந்து அனுப்பப்பட்டன என கணினியின் ஐபி முகவரியையும் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சிலரை சென்னை காவல்துறை கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்தநிலையில் இன்று சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட குமார் என்ற நபர் தெரிவித்துள்ளார். அதில் "நான் காலையில் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே நடந்து சென்றபோது, அங்கிருந்த இரண்டு நபர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்" என தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பீதி கிளப்பும் வெடிகுண்டு புரளிகள்! அலோகலப்படும் விமான நிலையங்கள்!

இதனையடுத்து உடனடியாக தாம்பரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து மோப்பநாய் உதவியுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர், பயணிகள் அமரும் நடைமேடைகள், குப்பை தொட்டிகள் பயணிகள் ஓய்வு எடுக்கும் அறைகள் மற்றும் கழிவறைகள், பயணிகளின் உடைமைகள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பயணிகள் கூட்டம் காரணமாக எப்போதுமே பரபரப்பாக காணப்படும் தாம்பரம் ரயில் நிலையம், போலீசாரின் சோதனையால் கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details