கோயம்புத்தூர்: கோவை, சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையில் நரேந்திர மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சி இன்று (மார்ச்.18) நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன பேரணி நடத்தும் பகுதி முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி, கோவைக்கு இன்று மாலை பாஜக சார்பில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் வருகையையொட்டி கோவை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்காநல்லூர் சாலை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், இன்று (மார்ச்.18) காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனிடையே அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், சந்தேகத்திற்கும் இடமான வகையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.