கிருஷ்ணகிரி: ஓசூரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் தனியார் குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திமுகவின் ஓசூர் மாமன்ற உறுப்பினரும், மருத்துவருமான ஸ்ரீ லட்சுமி என்பவருக்குச் சொந்தமான இம்மருத்துவமனை மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஸ்ரீ லட்சுமி, மருத்துவர் நவீன் ஆகியோர், சிப்காட் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மின்னஞ்சல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை, ஹைதராபாத், ஓசூர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைக்கு இது போன்ற மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போலீசார் மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு செயலிழப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறும் வழி..! அரசு வெளியிட்ட விளக்கம் - Epass To Visit Ooty And Kodaikkanal