சென்னை:சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான அலுவலகத்திற்கு இன்று காலை ஒரு இணையதள தகவல் வந்துள்ளது. அதில், சென்னையில் இருந்து காலை கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இண்டிகோ அலுவலகத்திற்கு அவசர தகவல் அளித்துள்ளனர்.
மேலும், விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கும் அவசர தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, இன்று காலை 8.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்வதற்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகளுடன் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. விமானத்தை நிறுத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அவசர அவசரமாக கீழே இறக்கி, ஓய்வறையில் தங்க வைத்தனர்.
அதன்பின், விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்ததன் பேரில், அந்த விமானம் இன்று காலை 10:40 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த புரளியை கிளப்பிவிட்ட மர்ம நபர்கள் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக இண்டிகோ பயணிகள் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருப்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணசிக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்திற்கும், ஜூன் 1ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மின் நுகர்வோர்களுக்கு புதிய அப்டேட் வந்தாச்சு! என்ன தெரியுமா? - Tangedco